சமதளமற்ற ரயில் கடவுப்பாதை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
காட்டாங்கொளத்துார்:காட்டாங்கொளத்துார் -- காவனுார் சாலையை பயன்படுத்தி கொருக்கந்தாங்கல், காவனுார், வடமேல்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அடிப்படை தேவைகளுக்காக தினமும் சென்று வருகின்றனர்.படப்பை, மணிமங்கலம், கரசங்கால் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லவும், சுற்றியுள்ள பகுதி மக்கள் இந்த வழியாக அதிக அளவில் சென்று வருகின்றனர்.இந்த சாலையில், காட்டாங்கொளத்துார் ரயில் நிலையம் அருகில் ரயில்வே தண்டவாள கடவுப்பாதை உள்ளது. இந்த கடவுப்பாதை பகுதியில் சாலை பெயர்ந்து, ஜல்லி கற்கள் சமதளமின்றி சிதறியுள்ளன.இவை வாகனங்களின் டயர்களில் குத்தி பஞ்சராகி, வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அதனால், இப்பகுதியை சமப்படுத்தி, பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த ரயில்வே கடவுப்பாதையை, தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கடக்கின்றன. சமீபத்தில் இந்த பகுதியில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அதில் இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் செல்லும் போது தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த பள்ளங்களை சீரமைக்க ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.