உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விரிவுபடுத்தப்பட்ட மீன் விற்பனைக்கூடம் செய்யூரில் அமைக்க வேண்டுகோள்

விரிவுபடுத்தப்பட்ட மீன் விற்பனைக்கூடம் செய்யூரில் அமைக்க வேண்டுகோள்

செய்யூர்:செய்யூரில், விரிவுபடுத்தப்பட்ட மீன் விற்பனைக்கூடம் அமைக்க வேண்டுமென, வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்யூர் பஜார் பகுதியில் சந்தைமேடு பகுதியில், வல்மீகநாதர் கோவிலுக்குச் சொந்தமான, 46 சென்ட் இடத்தில், தினமும் சந்தையும், வியாழக்கிழமைகளில் வாரச் சந்தையும் நடக்கின்றன. தினமும் சந்தையில், 15க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இயங்குகின்றன. பனையூர், தழுதாளிகுப்பம், கடப்பாக்கம் மற்றும் பல கடலோர மீனவ கிராமங்களில் கடலில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு மற்றும் பல கடல் உணவு பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. அம்மனுார், தேவராஜபுரம், நல்லுார் உள்ளிட்ட பகுதி மக்கள், இங்கு விற்பனை செய்யப்படும் கடல்சார் உணவு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அப்பகுதியில் அமைக்கப்படும் மீன் கடைகளுக்கு, ஆண்டுதோறும் ஹிந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஏலம் விடப்பட்டு, தினமும் மற்றும் வாரச் சந்தையில் அமைக்கப்படும் கடை உரிமையாளரிடம், வாடகை வசூல் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு காய்கறி கடைக்கு, 100 ரூபாய், மீன் கடைக்கு 50 மற்றும் இதர கடைகளுக்கு 30 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. கடைகள் அமைக்க கூரை வசதி, மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இங்கு அடிப்படை வசதியுடன் கூடிய விரிவுபடுத்தப்பட்ட மீன் விற்பனைக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி