செய்யூர் அரசு மருத்துவமனையில் பார்க்கிங் அமைக்க கோரிக்கை
செய்யூர்: செய்யூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் பஜார் வீதியில், அரசு மருத்துவமனை உள்ளது. நல்லுார், புத்துார், ஓணம்பாக்கம், தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, தேவராஜபுரம், அம்மனுார் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது. உள்நோயாளிகள், புறநோயாளிகள், அவசர சிகிச்சை என, தினமும் நுாற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைக்கு வருவோர் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். இம்மருத்துவமனையில் வாகன நிறுத்தம் இல்லாததால், தங்களது வாகனங்களை மருத்துமனை வளாகத்தில், வழியிலேயே தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், மருத்துவமனைக்குள் வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள், மருத்துவர்களின் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில், வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.