உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலுாரில் வி.ஏ.ஓ.,வை தாக்கியவருக்கு காப்பு

பாலுாரில் வி.ஏ.ஓ.,வை தாக்கியவருக்கு காப்பு

மறைமலை நகர்:பாலுாரில், கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 45; காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராம நிர்வாக அலுவலர். பாலுார் கலைஞர் தெருவைச் சேர்ந்த தனமூர்த்தி, 50, என்பவர், கல்லுாரியில் படிக்கும் தன் மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் கேட்டு, விண்ணப்பித்து உள்ளார். விண்ணப்பத்தில், தனமூர்த்தியின் மனைவி பெயர் கிறிஸ்துவ பெயராக இருந்துள்ளது. இது தொடர்பாக, முருகேசன் நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில், தனமூர்த்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது தனமூர்த்தி, 'மனைவி பெயர் கிறிஸ்துவ பெயராக இருந்தால் உங்களுக்கு என்ன' எனக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், 'ஆதி திராவிடர் சான்றிதழ் வழங்க முடியாது. கிறிஸ்துவர்களுக்கு வழங்கும் பி.சி., சான்றிதழ் தான் வழங்க முடியும்' எனக் கூறியுள்ளார். அதன் பின் மொபைல் போன் இணைப்பை துண்டித்த தனமூர்த்தி, நேற்று முன்தினம் மதியம் 1:30 மணியளவில் பாலுார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து, முருகேசனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை, கையால் தனமூர்த்தி தாக்கி உள்ளார். இது குறித்து முருகேசன் அளித்த புகாரின்படி, பாலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் மாலை தனமூர்த்தியை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ