திருக்கச்சூரில் பராமரிப்பற்ற பூங்கா சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
மறைமலை நகர்:திருக்கச்சூரில், பராமரிப்பின்றி உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மறைமலை நகர் நகராட்சி, 19வது வார்டு திருக்கச்சூர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு அண்ணா நகர் பிரதான சாலையோரம், பூங்கா உள்ளது. இதில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி பாதை, அமர்ந்து பேச இருக்கைகள் போன்றவை, நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளன. துவக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த இந்த பூங்காவில், தற்போது பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பூங்காவிற்கு விளையாட வரும் குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, இப்பூங்காவை சீரமைக்க வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த பூங்காவை அண்ணா நகர், ஈஸ்வரன் நகர், பெரியார் நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த பூங்காவில் மாலை நேரங்களில் குழந்தைகள் தினமும் விளையாடுவர். முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு இளைப்பாறுவர். பொங்கல் விழா போன்றவை இங்கு நடத்தப்படுவது வழக்கம்.தற்போது பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து, மோசமான நிலையில் உள்ளது.பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து உள்ளன. அத்துடன், இங்குள்ள வீடுகளைச் சுற்றியும் புதர் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. அருகில் அங்கன்வாடி மையம் உள்ள நிலையில், குழந்தைகள் இப்பகுதியில் விளையாடி வருகின்றனர்.எனவே, நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைத்து, குடியிருப்புவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.