மறைமலை நகர் - ஆப்பூர் சாலையில் தொடர் வழிப்பறியால் பகுதிவாசிகள் அச்சம்
மறைமலை நகர்:மறைமலை நகர் -- ஆப்பூர் செல்லும் சாலையில், இரவு நேரங்களில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால், பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை, சிங்கப்பெருமாள் கோவில் -- ஒரகடம் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.இந்த சாலை சட்டமங்கலம் வரை மறைமலை நகர் காவல் நிலைய கட்டுப்பாட்டிலும், தாளிமங்களம், ஆப்பூர் ஆகியவை பாலுார் காவல் நிலைய கட்டுப்பாட்டிலும் வருகின்றன.தாளிமங்கலம் பகுதியில் சாலையோர மின் விளக்குகள் இல்லாததால், இரவில் செல்வதற்கே அச்சமாக உள்ளது. அத்துடன், அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் சமூக விரோதிகள், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கி, கீழே விழச் செய்து பணம், நகை போன்றவற்றை திருடிச் செல்கின்றனர்.அதன் பின், அருகில் உள்ள காடுகளில் மறைந்து கொள்கின்றனர். இதனால், பகுதிவாசிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் என்பதால், இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்துகிறோம். ஆனால் தற்போது, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோரை மடக்கி தாக்கி பணம், மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் செல்கின்றனர்.இதே கிராமத்தில் கடந்த ஏப்., மாதம், வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.கடந்த 25ம் தேதி, இந்த பகுதியில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், மர்ம நபர்கள் தவறாக நடந்து கொண்டனர். அப்பெண்ணை மீட்டு, பாலுார் போலீசாரிடம் ஒப்படைத்தோம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளதால், இரவு நேரங்களில் இந்த பகுதியில், போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.