சாலையோர அபாய பள்ளங்கள் திருவடிசூலத்தில் விபத்து அபாயம்
மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் -- திருவடிசூலம் சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை திருவடிசூலம், ஈச்சங்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை. தினமும், ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் மற்றும் இந்த பகுதியில் உள்ள அம்மன் கோவில், பைரவர் கோவில்களுக்கு வரும் தனியார் பேருந்துகள், இந்த சாலையில் சென்று வருகின்றன.மேலும், மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்வோரும் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.சாலையின் இருபுறமும், காப்புக்காடுகள் உள்ள பகுதியில் சாலை குறுகலாகவும், சாலை ஓரம் அதிக அளவில் பள்ளங்களும் இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவசர காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.மேலும், அடிக்கடி வாகனங்கள் பழுதடைந்து, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இந்த பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, இந்த சாலை ஓரம் உள்ள பள்ளங்களை சீரமைக்கவும், மின் விளக்குகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.