தனியார் கல்லுாரி மாணவரிடம் வழிப்பறி
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, தனியார் கல்லுாரி மாணவரிடம் வழிப்பறி செய்த போதை நபர்கள் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியை சேர்ந்தவர் சந்தோஷ், 20. இவர், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், பி.எஸ்.சி., படித்து வருகிறார். நேற்று நள்ளிரவு 12:15 மணியளவில், ஜி.எஸ்.டி., சாலையில், 'பைக்'கில், வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், முத்தாலம்மன் கோவில் அருகே வரும் போது, மது போதையில் இருந்த இரு நபர்கள், 'லிப்ட்' கேட்பது போல், சந்தோஷை வழிமறித்துள்ளனர். சந்தோஷ் பைக்கை நிறுத்தியதும், போதை நபர்கள் இருவரும் அவரை மிரட்டி, 500 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த சந்தோஷ் அளித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.