உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பணிகளை தாமதப்படுத்தினால் தினமும் ரூ.10,000 அபராதம்

பணிகளை தாமதப்படுத்தினால் தினமும் ரூ.10,000 அபராதம்

சென்னை 'சாலை சீரமைப்பு, வடிகால்வாய் பணிகளை குறித்த காலத்தில் முடிக்காமல் தாமதப்படுத்தினால், தினமும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி எச்சரித்துள்ளது. தொடர்ந்து அலட்சியம் காட்டினால், கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர் எனவும், தெற்கு வட்டார துணை கமிஷனர் அதாப் ரசூல் எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சியின், தெற்கு வட்டார துணை கமிஷனர் அதாப் ரசூல் தலைமையில், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் நடந்து வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், அடையாறு மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, கவுன்சிலர் அடுக்கடுக்காக பல புகார்களை கூறினர். அவற்றில் சில: பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் மழைநீர் வடிகால்வாய், சாலை சீரமைப்பு, கழிவுநீர் பணிகள் அதிகம் நடந்தாலும், துறை அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதேபோல் தாமதம் தொடர்ந்தால், வரும் பருவமழையை எதிர்கொள்வதில் பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். வடிகால்வாய், குடிநீர், கழிவுநீர் திட்டப் பணிகளை ஒரே நேரத்தில் செய்வதால், சாலைகள் இஷ்டம்போல் தோண்டப்படுகின்றன. இதனால் பல சாலைகள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். கவுன்சிலர்களின் புகார் குறித்து, துணை கமிஷனர், ஒப்பந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டார். ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள் மழுப்பலாக பதில் கூறியதால், துணை கமிஷனர் அதாப் ரசூல் கோபம் அடைந்தார். இதையடுத்து, துணை கமிஷனர் அதாப் ரசூல் பேசியதாவது: பணியை குறிப்பிட்ட நாளில் துவங்கி, அதற்குரிய அவகாசத்தில் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால், தினமும் 10,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி அலட்சியம் காட்டினால், ஒப்பந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்து அவர் பேசினார். கட்டாயம் பணிகள் தொடர்பான கலந்தாலோசனை கூட்டங்களில் ஒப்பந்தம் எடுத்தவர்கள் வருவதில்லை. பணி மேற்பார்வையாளர்கள், ஊழியர்களை அனுப்பி வைப்பதால், கவுன்சிலர்கள், உயர் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு, உரிய பதில் கூற முடியாமல் அவர்கள் திணறுகின்றனர். இனிமேல், அடுத்தடுத்த பணி தொடர்பான கூட்டங்களில், ஒப்பந்தம் எடுத்தவர்கள் வர வேண்டும் என மாநகராட்சி அதி காரிகள் உத்தரவிட்டுள்ளனர். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வர இருப்பதால், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் பணிகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு பருவமழையின்போது, மக்கள் பாதிப்படையாதவாறு சாலை மற்றும் வடிகால்வாய் பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். இப்பணிகளை செப்., 30க்குள் முடித்திருக்க வேண்டும் என, மாநகராட்சி மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஒப்பந்ததாரர்கள் சரிவர ஒத்துழைக்காதது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. எனவே, பணிகளை முடுக்கிவிடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதை கருத்தில் வைத்தே, ஒப்பந்ததாரர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் நடவடிக்கைகளை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை, தெற்கு வட்டாரம் மட்டுமின்றி, மாநகராட்சி முழுதும் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இணைப்பு பணி மந்தம் மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக வேளச்சேரி, தரமணி, கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. சாலை, வடிகால்வாய் பணிகளை குறிப்பிட்ட அவகாசத்தில் முடித்தால் தான், பருவமழையை சமாளிக்க முடியும். வடிகால்வாய் இணைப்பு இல்லாமல் ஆங்காங்கே துண்டு துண்டாக நிற்கிறது; தரமாகவும் செய்வதில்லை. சாலையை சுரண்டிவிட்டு மாதக்கணக்கில் அப்படியே போட்டு விடுகின்றனர். ஏன் என்று கேட்டால், வேறு இடத்தில் பணி முடிந்தால் தான் இங்கு செய்ய முடியும் என ஒப்பந்த நிறுவனங்கள் அலட்சியமாக பதில் கூறுகின்றன. பூஜை போட்டு பல மாதமாகியும் பணிகள் துவங்காத இடங்களும் உள்ளன. - கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி