உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இளநீர் வியாபாரி மீது குண்டு வீசிய வழக்கில் ஏழு பேருக்கு காப்பு

இளநீர் வியாபாரி மீது குண்டு வீசிய வழக்கில் ஏழு பேருக்கு காப்பு

மறைமலை நகர் கூடுவாஞ்சேரியில், நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும், இளநீர் வியாபாரி மீது தாக்குதல் நடத்திய வழக்கில், ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். கூடுவாஞ்சேரி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 34. அதே பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையோரம் இளநீர் கடை நடத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்து விட்டு, தன் வீட்டின் முன் வெங்கடேசன் அமர்ந்திருந்தார். இரவு 10:45 மணியளவில், இரண்டு 'பைக்'குகளில் வந்த மர்ம நபர்கள், வெங்கடேசனை கத்தியால் வெட்டி விட்டு, நாட்டு வெடி குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அங்கம்பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு, பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் தொடர்புள்ள, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, ஓட்டேரி பகுதிகளைச் சேர்ந்த வினாயகமூர்த்தி, 24, அகஸ்டின், 23, எபினேசன், 23, சத்யா, 22, சக்திவேல், 24, ராகவேந்திரன், 27, விஷாஷ், 22, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரித்தனர். இதில், இரண்டு மாதங்களுக்கு முன் வினாயகமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள், வெங்கடேசன் வசித்து வரும் தெரு வழியாக, 'பைக் ரேஸ்' நடத்தியுள்ளனர். இதை அவர் தட்டிக் கேட்டு உள்ளார். இதில் கோபமடைந்த இவர்கள், வெங்கடேசனை திட்டம் தீட்டி வெட்டியது தெரிந்தது. இதையடுத்து, விசாரணைக்குப் பின் அனைவரும், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை