மதுராந்தகம் நகராட்சிக்கு ரூ. 43 லட்சத்தில் கழிவுநீர் வாகனம்
மதுராந்தகம், மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள், அதிக அளவிலான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.நகராட்சியில் உள்ள குடியிருப்புகள், நகராட்சியை சுற்றி உள்ள கிராமப் பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்களில் இருந்து தனியார் கழிவு நீர் வாகனங்கள் வாயிலாக கழிவுநீர் எடுக்கப்படுகிறது.இந்த தனியார் வாகனங்கள், கருங்குழி பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் கசடு கழிவு மேலாண்மை பகுதிக்கு கழிவு நீரை கொண்டு செல்லாமல், கிராமப்புற பகுதிகளில் காட்டுப்பகுதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் வெளியேற்றி வருகின்றன.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவததோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.இதை தவிர்க்க, மதுராந்தகம் நகராட்சிக்கு சொந்தமாக துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 43 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் வாங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. கழிவுநீர் வாகனம் இயக்குவதற்கு ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஒப்பந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் செப்டிக் டேங்கில் இருந்து கழிவு நீர் எடுக்க 1000 ரூபாயும், நகராட்சிக்கு வெளியில் இருந்து கழிவு நீர் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கழிவு நீர் வாகனத்தை, நேற்று, மக்கள் பயன்பாட்டிற்கு, நகர மன்ற தலைவர் மலர்விழி, நகராட்சி ஆணையர் அபர்ணா துவக்கி வைத்தார்.