முதுகரை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி அவசியம்
சித்தாமூர்:முதுகரை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர். சித்தாமூர் அடுத்த முதுகரை ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதுராந்தம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தை சிறுநல்லுார், வசந்தவாடி, முதுகரை உள்ளிட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். மதுராந்தகம், கூவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன. தினமும் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என, ஏராளமானோர் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், பயணியர் மதிய நேரத்தில் வெயிலில் பேருந்திற்காக காத்திருக்கும் சூழல் தொடர்கிறது. மேலும், மழைக்காலத்தில் பேருந்து நிறுத்தம் அருகே மழைநீர் தேங்குகிறது. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் மக்கள் நலன் கருதி, முதுகரையில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.