உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அதிர்ச்சி! பரனுார் டோல்கேட்டில் 19 ஆண்டுகளில் 57.6 சதவீதமே வசூல் நெடுஞ்சாலை ஆணையம் பதிலால் வாகன ஓட்டிகள் கொதிப்பு

அதிர்ச்சி! பரனுார் டோல்கேட்டில் 19 ஆண்டுகளில் 57.6 சதவீதமே வசூல் நெடுஞ்சாலை ஆணையம் பதிலால் வாகன ஓட்டிகள் கொதிப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடியில் வசூலிக்க வேண்டிய, மொத்த மூலதன கட்டுமான செலவில், 19 ஆண்டுகளில், 57.6 சதவீதம் தொகை மட்டுமே வசூலாகி உள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக தெரிந்துள்ளது. இச்சுங்கச்சாவடி 2019ம் ஆண்டே காலாவதியானதாக கடந்தாண்டு சி.ஏ.ஜி., அறிக்கை வெளியான நிலையில், தற்போது வெளியான தகவலால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.சென்னை -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனுார் பகுதியில், சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.சென்னையின் நுழைவாயிலாக உள்ள இந்த சுங்கச்சாவடியில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர் தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் சொந்த ஊர் செல்லும் போது, வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும்.இந்த சுங்கச்சாவடி குறித்து தாம்பரம், சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கேட்ட கேள்விகளுக்கு, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் பதில் அளித்து உள்ளது. அதில், சாலை அமைக்க செலவழித்த மொத்த மூலதன செலவில், 19 ஆண்டுகளில் 57.6 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் அளித்துள்ள பதில்:பரனுார் சுங்கச்சாலை இரும்புலியூரில் தொடங்கி, மேலவலம்பேட்டை நெல்வாய் சந்திப்பு வரை, 46.5 கி.மீ., துாரத்தில் முடிவடைகிறது.இந்த சாலையை அமைக்க மொத்த மூலதன கட்டுமான செலவு, 1,036.91 கோடி ரூபாய். 19 ஆண்டுகள் 5 மாதங்களில், அதாவது 2005 ஏப்.,- - 2024 ஆக., வரை, 596.80 கோடி ரூபாய், சுங்க கட்டணமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.இது மொத்த மூலதன செலவில், 57.6 சதவீதம். மீதமுள்ள 440.11 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த சாலையை வடிவமைத்த போது இருந்த போக்குவரத்தை விட, 295 சதவீதம் அதிகமான வாகனங்கள் தற்போது சென்று வருகின்றன.இதனால், 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட வேண்டிய வாகனங்களை, நெரிசல் காரணமாக 40 கி.மீ., வேகத்தில் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால், நேரம் மற்றும் எரிபொருள் விரயம் ஏற்பட்டு வருகிறது.* விபத்தை குறைக்க...பரனுார் சுங்கச்சாவடி முதல் ஆத்துார் சுங்கச்சாவடி வரை, 50 கி,மீ., துாரம் சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.நீண்ட காலமாக விபத்துகள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள உத்திரமேரூர், படாளம், மதுராந்தகம், திண்டிவனம் சந்திப்புகளில், சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் அமைக்கும் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த சாலையில் புறநகர் பகுதியில் மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய, 7 இடங்களில், மின்துாக்கி வசதியுடன் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் திட்டம், ஆரம்ப நிலையில் உள்ளது.* எட்டு வழிச்சாலை:இரும்புலியூர் - வண்டலுார் வரை 2.30 கி.மீ., துாரம், 20.77 கோடி ரூபாயிலும், வண்டலுார் -- கூடுவாஞ்சேரி வரை 5.30 கி.மீ., துாரம், 44.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கூடுவாஞ்சேரி -- செட்டி புண்ணியம் மகேந்திரா சிட்டி வரை, 13.30 கி.மீ., துாரம், 209.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம், 20.9 கி.மீ., துாரத்திற்கு, 274.57 கோடி ரூபாயில், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் பதில் அளித்துள்ளது.குறிப்பாக, இந்த சுங்கச்சாவடி கடந்த 2019ம் ஆண்டே காலாவதியாகி விட்டதாக, கடந்தாண்டு ஆகஸ்டில் வெளியான சி.ஏ.ஜி., அறிக்கை வாயிலாக தகவல்கள் வெளியானது. தற்போது, வெறும் 57.6 சதவீதம் மட்டுமே சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவல், வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.* சந்தேகம்ஆர்.டி.ஐ., வாயிலாக வெளியாகி உள்ள தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெரும் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்று உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியாக சி.ஏ.ஜி., அறிக்கையை அடிப்படையாக கொண்டு, சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என, அனைத்து கட்சிகள் சார்பில் பரனுாரில் போராட்டம் நடத்தப்பட்டது. முறைகேடுகள் குறித்து, காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.- கணேஷ்,மாநில செய்தி தொடர்பாளர்,தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு.* நம்ப முடியவில்லைஜி.எஸ்.டி., சாலையில் பல ஆண்டுகளாக விளக்குகள் முறையாக எரியாமல், சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. தினந்தோறும் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. சாலையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்கள், விபத்தில் உடையும் கண்ணாடி துண்டுகள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்வதில்லை. நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்குவது சவாலாக உள்ள நிலையில், 1,000 கோடி ரூபாய் மூலதன செலவு எனக் கூறுவது, நம்பத்தகுந்த வகையில் இல்லை.- ப.மணிகண்டன், டிரைவர், சிங்கபெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி