செங்கை அரசு மருத்துவமனையில் கஞ்சா விற்பனையால் அதிர்ச்சி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவ பயனாளர்கள் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதன்படி இங்கு தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். உள்பயனாளர்களாக 1,700 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை பார்ப்பதற்கு உறவினர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில், சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள், கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். கஞ்சா வாங்கி பயன்படுத்துவோர், மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்கின்றனர். இதுமட்டுமின்றி பெண்களை கிண்டல் செய்து, பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். இதனால், இதுபோன்ற குற்ற செயல்களை கட்டுப்படுத்த, தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, கஞ்சா விற்பனையை தடை செய்ய வேண்டும். பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள், மருத்துவமனை வளாகத்தில் கஞ்சா விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.