பொது இடத்தில் புகை பிடிப்போர் செங்கையில் கடிவாளம் அவசியம்
மறைமலைநகர்செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி வளாகம், மருத்துவமனை வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.செங்கல்பட்டு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும், புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.செங்கல்பட்டு, சிங்க பெருமாள் கோவில்,மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலரும், அடிப்படை தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில், புகை பிடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பொது இடங்களில் பீடி, சிகரெட் பிடிக்கக் கூடாது என தடை இருந்தும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி வளாகங்களுக்கு அருகிலும், மருத்துவமனை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகில் இயங்கும் டீ கடை, பெட்டிக்கடை, ஹோட்டல் போன்றவற்றில், உணவு பொருட்களை விட, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையே அதிக அளவில் உள்ளது.அதை வாங்குவோர், அங்கேயே நின்று புகைப்பதால் வெளியாகும் புகை, அந்த பழக்கம் இல்லாதவர்களின் உடல் நலனை பாதிக்கும் அபாயம் உள்ளது.குறிப்பாக சிறுவர், கர்ப்பிணியர் மற்றும் அனைத்து தரப்பு நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எளிதாக உடல் நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு கடும் அபராதம் விதிக்கும் நடைமுறையை, அதிகாரிகள் முறையாக அமல்படுத்த வேண்டும்.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிகரெட் பிடிக்கும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி, மருத்துவமனை, பூங்கா போன்ற இடங்களில் சிகரெட் விற்க தடை விதித்து, அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.போலீசார் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் இணைந்து, பொது இடங்களில் சிகரெட் பிடிப்போரை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.