பழுதான கட்டடங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
சித்தாமூர்:பொலம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சித்தாமூர் அருகே உள்ள பொலம்பாக்கம் ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் எதிரே ஊராட்சி மன்ற அலுவலக வளாகம் உள்ளது. ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், மரக்கன்றுகள் வளர்ப்பு பண்ணை உள்ளிட்டவை உள்ளன. வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மருத்துவமனைக் கட்டடம் மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகே உள்ள நெற்களம் எதிரே பழுதடைந்த மேல்நிலைத் நீர்த் தேக்கத்தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் பொலம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.