மாமல்லை ரெஸ்டாரன்ட்களில் மது விற்றால் கடும் நடவடிக்கை
மாமல்லபுரம்:மாமல்லபுரம் 'ரெஸ்டாரன்ட்'களில், மதுக்கூடம் உரிமமின்றி, சட்டவிரோதமாக மது விற்பவர்கள் கைது செய்யப்படுவர் என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.மாமல்லபுரத்தில், ஒற்றைவாடைத் தெரு, மீனவர் பகுதி உள்ளிட்ட இடங்களில், 'ரெஸ்டாரன்ட்' உணவகங்கள் ஏராளமாக இயங்குகின்றன. இந்திய, சர்வதேச உணவு வகைகள் இவற்றில் விற்கப்படுகின்றன. இந்த ரெஸ்டாரன்ட்கள், உணவகத்திற்கான உரிமம் மட்டுமே பெற்றுள்ளன. ஆனால் இவற்றை நடத்துவோர், மதுக்கூடத்திற்கான உரிமம் பெறாமலே, சட்டவிரோதமாக இங்கு டாஸ்மாக் மது, புதுச்சேரி மாநில மது உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.கடற்கரை விடுதிகள் மட்டுமே, மதுக்கூட உரிமம் பெற்று, மதுபானம் விற்கும் நிலையில், இந்த ரெஸ்டாரன்ட்களில் சட்டவிரோத மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.சிற்பங்களைக் காண வருவோரை விட, ரெஸ்டாரன்ட்களில் மது அருந்தி, கடல் உணவுகளை ருசிப்பதற்காகவே வரும் கூட்டமே அதிகம்.புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில், இந்த ரெஸ்டாரன்ட்களில் மது விற்பனை களைகட்டும். இதை தடுக்க, மாமல்லபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்களபிரியா, ரெஸ்டாரென்ட் பிரதிநிதிகள் கூட்டத்தை, நேற்று நடத்தினார். அப்போது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்யக் கூடாது என, எச்சரித்தார்.இதுகுறித்து, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மங்களபிரியா கூறியதாவது:மாமல்லபுரம் ரெஸ்டாரன்ட்களில் உணவு மட்டுமே விற்க வேண்டும். மதுக்கூட உரிமம் பெறாமல், மது வகைகள் விற்க கூடாது. சட்டவிரோதமாக மது விற்பது நடப்பது தெரிந்தால், முதலில் ரெஸ்டாரென்டிற்கு,'சீல்' வைப்போம். அடுத்தகட்டமாக, அதன் உரிமையாளரை கைது செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.