செங்கல்பட்டில் மின் கம்பத்தில் திடீர் தீ
செங்கல்பட்டு, செங்கல்பட்டு, பெரிய நத்தம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த வீடுகளுக்கு, செங்கல்பட்டு மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, தெருவோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பெரிய நத்தம், சூளை ஆதிமூலம் தெருவிலுள்ள மின் கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் திடீரென உரசி, தீப்பற்றி எரியத் துவங்கியது.இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள், தீயின் மீது மண்ணைக் கொட்டி அணைத்தனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:இந்த பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு, குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு வருகிறது.மின்கம்பிகள் தாழ்வாகச் செல்வது குறித்து புகார் அளித்தாலும், மின்வாரிய அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை.மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.