தடுப்பணையில் திடீர் தண்ணீர் திறப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கே.கே. புதுார் பகுதியில் கிளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் திடீரென திறக்கப்பட்டதால், எதிர்வரும் கோடை காலத்தில் குடிநீர் மற்றும் விவசாய பணிக்கான நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரியில் இருந்து பருவமழை காலங்களில், கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு கிளியாற்றில் சென்று கடலில் கலந்து வந்தது. தண்ணீர் வெளியேற்றம்
கிளியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்தனர்.அதன்படி, கிளியாற்றில் கே.கே. புதுார் பகுதியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தடுப்பணை கட்டப்பட்டது.அதனால், தாதங்குப்பம், முள்ளி, இருசமநல்லுார், கே.கே.புதுார், கிணார், வீராணங்குன்னம், முருக்கஞ்சேரி வளர்பிறை மற்றும் முன்னுாத்திக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் குடிநீர் தட்டுப்பாடு இன்றியும், ஆழ்துளை கிணற்று பாசனம் வாயிலாக, விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கிளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து, கிளியாறு வடிநில உபகோட்ட அதிகாரிகள் தண்ணீரை திறந்து வெளியேற்றி உள்ளனர். அறிவுறுத்தல்
இதனால், கடந்த இரண்டு தினங்களாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், தடுப்பணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இந்த ஆண்டு, கோடை காலத்தில் கால்நடைகள் மற்றும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழ்நிலை உள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.நீள்முடியோன் கிளியாறு வடிநில உபக்கோட்ட உதவி செயற்பொறியாளர் கூறியதாவது: வீராணம் குடிநீர் குழாய் செல்லும் தாதங்குப்பம் முதல் கே.கே.புதுார் சாலை பகுதியில், நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பால பணியின் காரணமாக, துாண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கிளியாற்றின் மையப் பகுதியில், துாண்கள் அமைக்கும் முதற்கட்ட பணிக்காக, மாவட்ட திட்ட இயக்குநரின் அறிவுறுத்தல்படி தடுப்பணையில் தண்ணீர் மட்டத்தை குறைக்கும் பொருட்டு, தண்ணீர் திறந்து வெளியேற்றப்பட்டது.மதுராந்தகம் ஏரியில் இருந்து கலங்கள் பகுதி வழியாக நீர் வெளியேற்றப்படுவதும் நிறுத்தப்பட்டது.தற்போது, மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேறும் நீர், தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் வகையில், தடுப்பணையின் ஷட்டர்கள் மூடி வைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.