அரசு பள்ளியை அகற்றுவது குறித்து கிராமத்தினரிடம் வட்டாட்சியர் பேச்சு
செய்யூர்:கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக, கோட்டைக்காடு அரசு பள்ளியை அகற்றுவது குறித்து, செய்யூர் வட்டாட்சியர் , கிராம மக்களிடம் பேச்சு நடத்தினார். செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன கோட்டைக்காடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளுக்காக, பள்ளி வளாகம் முழுதும் கையகப்படுத்த அளவீடு செய்யப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாற்று இடம் தேர்வு செய்யப்படாததால், புதிய பள்ளி கட்டடம் தற்போது வரை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், கோட்டைக்காடு அரசு பள்ளியை அகற்றுவது குறித்து, நேற்று காலை 11:00 மணிக்கு, செய்யூர் வட்டாட்சியர் கணேசன், கிராம மக்களிடம் பேச்சு நடத்தினார். இதில், புதிய பள்ளி கட்டடம் அமைத்த பிறகே, பழைய பள்ளி கட்டடத்தை அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய கட்டடம் அமைக்க நிலம் தேர்வு செய்ய, பள்ளி அருகே உள்ள பகுதிகளில், வட்டாட்சியர் ஆய்வு செய்தார்.