மேலும் செய்திகள்
நான்கு வழிச்சாலை பணி; மின்கம்பங்கள் மாற்றிமைப்பு
25-Oct-2024
தாம்பரம்:ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகரானது, தாம்பரம் - வேளச்சேரி சாலை. 16.3 கி.மீ., நீளம் உடைய இச்சாலை, கிழக்கு தாம்பரத்தில் துவங்கி, சேலையூர், கேம்ப் சாலை, செம்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரியை அடைகிறது.ஜி.எஸ்.டி., சாலைக்கு மாற்றாக விளங்குவதால், கிழக்கு தாம்பரத்தில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, 24 மணி நேரமும் போக்குவரத்து காணப்படுகிறது.வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 1992ம் ஆண்டு, ஒரு வழிப்பாதையாக இருந்த இச்சாலை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.அப்போது, நில எடுப்பு காரணமாக, பல இடங்களில் விரிவாக்க பணிகள் நடக்கவில்லை. பின், படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில், இச்சாலையை ஆறுவழியாக விரிவாக்கம் செய்யும் பணி, சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. போதிய இடவசதி உள்ள இடங்களில், விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.கிழக்கு தாம்பரம் முதல் மேடவாக்கம் வரை, சாலை விரிவுப்படுத்தப்படாமல் உள்ளது. சேலையூர் முதல் காமராஜபுரம் வரை, இருபுறமும் மின் கம்பங்களை அகற்றாமல், சாலையை அகலப்படுத்தி, ஜல்லிக்கற்கள் கொட்டி அப்படியே விட்டுவிட்டனர்.சாலை விரிவாக்கம் செய்யும் பணி, பல ஆண்டுகளாக 'ஜவ்'போல் இழுத்துக்கொண்டே செல்வதால், 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து உள்ளன.எஞ்சிய பணிகளை முடிக்க, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது:கேம்ப் சாலை முதல் ராஜகீழ்ப்பாக்கம் வரை, மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஆராயப்பட்டு வருகிறது. கிழக்கு தாம்பரம், கவுரிவாக்கம், சேலையூர் ஆகிய இடங்களில், சாலை அகலப்படுத்த வேண்டி உள்ளது.கிழக்கு தாம்பரம், கவுரிவாக்கம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை துவங்கியுள்ளது. சேலையூரில், நிலம் கையகப்படுத்தும் பணியை, நெடுஞ்சாலைத் துறையின் திட்டமிடல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சேலையூர் முதல் மகாலட்சுமி நகர் வரை, இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் 104 மின் கம்பங்களை அகற்ற வேண்டியுள்ளது. இதற்காக, மின் வாரியத்திற்கு, 3 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.விரைவில், நாங்களே, அந்த கம்பங்களை அகற்ற உள்ளோம். மழை முடிந்தவுடன், சாலை விரிவாக்கம் செய்யும் பணி முழுமையாக முடிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிழக்கு தாம்பரம் முதல் பாரதமாதா சாலை சந்திப்பு வரை, இருபுறமும் ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி, வாகன ஓட்டிகளுக்கு பயன்படுகிறதோ இல்லையோ, தனியார் பேருந்துகளை நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. கிழக்கு தாம்பரம் முதல் பாரதமாதா சாலை வரை, இருபுறமும் தினமும் ஏகப்பட்ட தனியார் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. போக்குவரத்து போலீசாருக்கு மாதந்தோறும் செல்ல வேண்டியது சென்று விடுவதால், அவர்கள் இதை பற்றி கண்டுக்கொள்வதே இல்லை. இவ்விஷயத்தில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் தலையிட்டு, தனியார் பேருந்துகள் நிறுத்தும் இடமாக சாலை மாறிவிட்டதை தடுக்க வேண்டும்.
25-Oct-2024