தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
கிளாம்பாக்கம், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுவோர், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு, கடந்தாண்டு தற்காலிக ஊழியர்களாக, 300க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு அடிப்படை கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டது. தவிர, ஒரு நாள் ஊதியமாக, 750 ரூபாயும் வழங்கப்பட்டு, 250 பணி நாட்கள் முடித்த பின், நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் எனக் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிய, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் என, இரண்டு உரிமங்களும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கடந்த மாதம் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிய ஊழியர்களை நியமனம் செய்யக் கூடாது எனக் கூறி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.அதற்கு எவ்வித பதிலும் இல்லாததால், சென்னையில் உள்ள 33 போக்குவரத்து கழக பணிமனைகளில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நேற்று, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, கடந்த 18 மாதங்களாக தற்காலிக பணியாளர்களாக வேலை செய்யும் தங்களை, பணி நிரந்தரம் செய்ய, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.