உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மூடப்படாத பம்பிங் ஸ்டேஷன் குழாய் 6 மாதங்களாக மாநகராட்சி அலட்சியம்

மூடப்படாத பம்பிங் ஸ்டேஷன் குழாய் 6 மாதங்களாக மாநகராட்சி அலட்சியம்

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, ஸ்டேட் பாங்க் காலனி - கைலாசபுரம் சந்திப்பில், பாதாள சாக்கடை 'பம்பிங் ஸ்டேஷன்' குழாய் உடைக்கப்பட்டு, ஆறு மாதங்கள் ஆகியும் சரியாக மூடப்படாததால், அப்பகுதி மக்கள் நாள்தோறும் பாதிப்படைகின்றனர்.தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், 52வது வார்டு, ஸ்டேட் பாங்க் காலனி - கைலாசபுரம் சந்திப்பில், பாதாள சாக்கடை 'பம்பிங் ஸ்டேஷன்' குழாய் உள்ளது.ஸ்டேட் பாங்க் காலனி, பிருந்தாவன் காலனி, கைலாசபுரம் 1, 2, 3 தெருக்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர், இந்த பம்பிங் குழாய் வழியாக வெளியேறுகிறது.மாநகராட்சி ஊழியர்கள், அவ்வப்போது வந்து, பம்பிங் குழாயில் இருக்கும் மோட்டாரை ஆன் செய்து, கழிவை வெளியேற்றுவர். இந்த நிலையில், ஆறு மாதத்திற்கு முன், இந்த குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக, மேற்பகுதியில் இருந்த மேன்ஹோலை உடைத்தனர்.மோட்டார் சரிசெய்த பின், புதிய மேன்ஹோல் அமைத்து மூடாமல், கற்களை கொண்டு மூடி அப்படியே விட்டு விட்டனர். அதிக போக்குவரத்து கொண்ட இச்சாலையில், இந்த பள்ளத்தால் நாள்தோறும் மக்கள் பாதிக்கப் படுகின்றனர்.குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக, எத்தனையோ முறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இதே நிலை நீடித்தால், இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் விழுந்து, உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், 'பம்பிங் ஸ்டேஷன்' குழாயை முறையாக மூட, அதிகாரிகள் முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி