உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆட்சிவிளாகம் இருளர் குடியிருப்பு மந்தமாக நடக்கும் கட்டுமான பணிகள்

ஆட்சிவிளாகம் இருளர் குடியிருப்பு மந்தமாக நடக்கும் கட்டுமான பணிகள்

செய்யூர்:செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான நெடுமரம், பாக்கூர், கொடூர், மடையம்பாக்கம் போன்ற கிராமங்களில், 40க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் சொந்தமாக வீடு இல்லாமல், நீர்நிலை புறம்போக்கு மற்றும் மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர்.சொந்த வீடு மற்றும் வீட்டுமனை வேண்டி, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்சிவிளாகம் கிராமத்தில், 33 இருளர் குடும்பத்தினருக்கு வீடு கட்ட, அரசு சார்பாக இடம் தேர்வு செய்யப்பட்டது.அங்கு, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகட்ட, கடந்த ஆண்டு பிப்., 23ம் தேதி பூமி பூஜை போடப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.பணிகள் துவங்கி 20 மாதங்கள் கடந்த நிலையில், தற்போது வரை அடித்தளம் அமைக்கும் பணி மட்டுமே நடந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத அப்பகுதிவாசி கூறியதாவது:பல ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல், பாக்கூர் ஏரிக்கரைப் பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகிறோம். கடந்த ஆண்டு, கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில் வீடு கட்டும் பணி துவங்கப்பட்டது.பல மாதங்களாக கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், தற்போது வரை வீடு கட்டும் பணி முடியவில்லை. அடிப்படை வசதி இல்லாமல், தற்போது முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இருளர் குடியிருப்பு கட்டுமான பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை