உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வளர்ச்சி பணிகள் குறித்து வெளிப்படை தன்மை இல்லை முறைகேடு தவிர்க்க ஊராட்சி தோறும் அறிவிப்பு அவசியம்

வளர்ச்சி பணிகள் குறித்து வெளிப்படை தன்மை இல்லை முறைகேடு தவிர்க்க ஊராட்சி தோறும் அறிவிப்பு அவசியம்

காட்டாங்கொளத்துார்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், ஊராட்சி தோறும் நடக்கும் பணிகள் மற்றும் விரைவில் நடக்க உள்ள பணிகள் குறித்து, வார்டு கவுன்சிலர்கள், பொது மக்கள் தெரிந்து கொள்ளும்படி, ஊராட்சி தோறும் அறிவிப்பு பலகை வைக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.கடந்த நான்கு ஆண்டுகளில், ஊராட்சி தோறும் நடந்து முடிந்துள்ள வளர்ச்சிப் பணிகள், தற்போது நடந்துவரும் பணிகள், நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் துவங்க உள்ள பணிகள் குறித்த விபரங்களை மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.இதனால், மக்கள் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஆண்டு தோறும் பலகோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கிராம பகுதிகளின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் 30க்கும் மேற்பட்ட திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கி, பல்வேறு பணிகளை முன்னெடுக்கின்றன.அதன்படி, சாலைகள் புனரமைப்பு, 'கல்வெர்ட்' அமைத்தல், குடிநீர் வசதி, வடிகால் அமைத்தல், அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு புதிய கட்டடங்கள், மழைநீர் வடிகால், சுகாதார மையங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த பணிகள் தற்போது எந்தெந்த ஊராட்சிகளில், எந்தெந்த வார்டுகளில், எந்தத் திட்டங்களின் கீழ், எவ்வளவு மதிப்பில் நடந்து வருகின்றன என்ற விபரங்களை, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகங்கள் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.இதனால், தங்கள் பகுதியில் நடக்கும் பணிகள் குறித்த எவ்வித விபரங்களும் பொது மக்களுக்கு தெரிவதில்லை.ஒரு தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறதென்றால், அதற்கு எந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அந்த பணியின் ஒப்பந்ததாரர் யார் என்ற விபரத்தை பணி துவங்கும் முன்னரே, அந்தப் பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வாயிலாக பகுதிவாசிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.அப்போதுதான், நடைபெறும் பணி, ஒதுக்கப்பட்ட தொகையின்படி தரமாக நடக்கிறதா என, பகுதிவாசிகள் கண்காணிக்க முடியும்.தவிர, ஒரு பணிக்கான நிதி ஒதுக்கப்பட்ட உடனே, அது குறித்த விபரங்களை மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்களின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், ஊராட்சி அலுவலகத்தின் முன், அறிவிப்பு பலகை வைத்து, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.ஆனால், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்த வெளிப்படை தன்மை எவ்விடத்திலும் இல்லை. எங்கே வெளிப்படை தன்மை இல்லையோ, அங்கே முறைகேடுகள் தாராளமாக நடக்கும்.எனவே, கடந்த நான்கு ஆண்டுகளில், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி விபரங்களை, இணையத்தில் வெளியிட வேண்டும்.தவிர, ஒதுக்கப்பட்ட நிதியில், இதுவரை முடிந்துள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அறிவிக்க வேண்டும். நிதி ஒதுக்கியும் துவக்கப்படாத பணிகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ