உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் எரிவாயு தகனமேடை பயன்பாட்டிற்கு துவக்க எதிர்பார்ப்பு

திருக்கழுக்குன்றம் எரிவாயு தகனமேடை பயன்பாட்டிற்கு துவக்க எதிர்பார்ப்பு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், 18 வார்டு பகுதிகள் உள்ளன. இங்கு இறந்தவரை எரிக்க, கானகோவில்பேட்டை, தேசுமுகிப்பேட்டை, மங்கலம், ருத்திரான்கோவில், புதுமேட்டுத்தெரு, பரமசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 10 மயானங்கள் உள்ளன.விறகு பயன்படுத்தி உடல்கள் எரியூட்டப்படுவதால் வெளிவரும் புகையால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதை தவிர்க்க, எரிவாயு தகன மேடை அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.அதைத் தொடர்ந்து, 2022 - 23 கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தில், 1.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பேருந்து நிலையம் அருகில் உள்ள மயானத்தில், கடந்த ஆண்டு 12 சிலிண்டர் வசதியுடன் தகனமேடை அமைக்கப்பட்டது.ஒரு உடலை, அதிகபட்சம் 45 நிமிடங்களில் எரியூட்டலாம். ஒரு நாளில், ஐந்து அல்லது ஆறு உடல்களை எரியூட்டி, சாம்பலை அப்புறப்படுத்தும் வகையில், இயந்திர சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகனமேடை பணிகள் முடிந்து ஓராண்டு கடந்தும், எரிவாயு தகனமேடை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.இதுகுறித்து, பேரூராட்சித் தலைவர் யுவராஜ் கூறியதாவது:பணிகள் முடிக்கப்பட்டாலும், அதை அமைத்துள்ள ஒப்பந்த நிறுவனம், பிரேத எரியூட்டு திறன், சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்ப்பு, சாம்பல் அகற்றம், புகை வெளியேற்றம் உள்ளிட்ட சோதனைகளை படிப்படியாக நடத்த வேண்டியுள்ளது.இரண்டு அடையாளம் தெரியாத உடல்களை எரியூட்டி சோதித்து, அதை வீடியோ காட்சியாக பதிந்து, பேரூராட்சி இயக்குனரகத்தில் ஒப்படைத்துள்ளோம்.மாசு கட்டுப்பாடு சான்று கிடைத்ததும், பயன்பாட்டிற்கு துவக்கப்படும். தன்னார்வ நிறுவனம் வாயிலாக செயல்படுத்தவும் முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி