மாமல்லை பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை
மாமல்லபுரம்,:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், திருமங்கையாழ்வார் சாற்றுமுறை சேவை உற்சவம் கண்டார்.வைணவ சமய பன்னிரு ஆழ்வார்களில், திருமங்கையாழ்வார் குறிப்பிடத்தக்கவர். கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திர நாளில் அவதரித்தார். மாமல்லபுரத்தில் வீற்றுள்ள ஸ்தலசயன பெருமாளை, அவர் 20 பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளார். ஸ்தலசயன பெருமாள் கோவிலில் வீற்றுள்ள அவர், அவதார நாளான நேற்று, சாற்றுமுறை உற்சவம் கண்டார்.இதை முன்னிட்டு காலை திருமங்கையாழ்வார், பெருமாள், நிலமங்கை தாயார், தேவியர் ஆகியோர், சிறப்பு திருமஞ்சன வழிபாடு கண்டனர். மாலை, அலங்கார ஸ்தலசயன பெருமாள், தேவியர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, திருமங்கையாழ்வார் வீதியுலா சென்று, மீண்டும் கோவிலை அடைந்ததும், திருவாய்மொழி சாற்றுமுறை சேவை கண்டார். ஆழ்வாருக்கு, பெருமாள் பரிவட்ட மரியாதை அளித்தார்.