மெட்ரோ, பாலாறு குடிநீர் வினியோகம் இல்லாததால் திருநீர்மலைவாசிகள் தவிப்பு
திருநீர்மலை:தாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலம், திருநீர்மலை, 31வது வார்டில், ரங்கா நகர், சரஸ்வதிபுரம் விரிவு, டெம்பிள் டவுன், சுப்புராயன் நகர், காசி கார்டன் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதிகளுக்கு மெட்ரோ அல்லது பாலாறு குடிநீர் வினியோகம் இல்லை. உள்ளூர் ஆதாரம் வாயிலாக கிணற்று தண்ணீரை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்கின்றனர். அப்படியே வினியோகம் செய்யப்படும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாததால், குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. மற்ற தேவைகளுக்கு மட்டுமே பயன்படுகிறது.அதனால், வேறு வழியின்றி பணம் கொடுத்து, கேன் தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகளில் ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கும் வகையில், அப்பகுதி நிலத்தடி நீர் அதற்கு உகந்ததாக இல்லை.தற்போது, வெயிலின் தாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம் மெல்ல குறைய துவங்கியுள்ளது.அதே நேரத்தில், கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனால், இந்த வார்டுக்கு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை லாரிகளில் மெட்ரோ அல்லது பாலாறு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அதற்கு, ஒன்றாவது மண்டல பொறியியல் பிரிவு அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.