உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் சார்-பதிவாளர் ஆபீசை பிரிக்கும் திட்டம்... இழுபறி!: கிராமங்களை இணைப்பதில் குளறுபடியால் எதிர்ப்பு

திருப்போரூர் சார்-பதிவாளர் ஆபீசை பிரிக்கும் திட்டம்... இழுபறி!: கிராமங்களை இணைப்பதில் குளறுபடியால் எதிர்ப்பு

திருப்போரூர்:திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலுார், வண்டலுார் ஆகிய நான்கு அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், கிராமங்களை இணைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் இழுபறி நீடிக்கிறது.திருப்போரூர் தெற்கு மாடவீதியில், 1886ம் ஆண்டு முதல் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சார் - பதிவாளர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இங்கு ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலைகளில் உள்ள நாவலுார், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், கானத்துார், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களின் சொத்து ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர்.ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலை போன்ற இடங்களில் ஐ.டி., நிறுவனங்கள், பன்னாட்டு தொழில் சார்ந்த நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய மனைப்பிரிவுகள் அதிக அளவில் இருப்பதால், இந்த பகுதிகளில் உள்ள நிலங்களின் மதிப்பு அதிகம்.பத்திரம் பதிவு செய்ய இந்த சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் அதிக அளவில் வருவர்.இதனால், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தைப் பொறுத்தவரை, கோடிக்கணக்கில் பணம் புரளும் இடமாக உள்ளது. இங்கு ஆண்டுக்கு, 25,000 பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.இதன் காரணமாக இங்கு கூட்ட நெரிசல், இட நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தன.இதனால், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு இடம் மாற்ற ஆய்வு செய்யப்பட்டது.இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. அதாவது, திருப்போரூர் சட்டசபை தொகுதியின் தலைமையிடமாகவும், ஒன்றிய, வட்ட தலைமையிடமாகவும் உள்ளது. இங்கு தாலுகா, ஒன்றிய அலுவலகம், கல்வித்துறை அலுவலகம், மின் வாரிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.இதன் காரணமாக, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வரும் பொதுமக்கள், ஒரே பகுதியில் தங்கள் வேலைகளை முடித்துச் செல்கின்றனர். ஆனால், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்தால், அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால் இங்குள்ள வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த எதிர்ப்பால், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை முழுமையாக இடமாற்றம் செய்வது கைவிடப்பட்டது.அதற்கு மாற்றாக, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலுார், வண்டலுார் ஆகிய நான்கு அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.புதிய அலுவலகங்கள் இடம்பெறும் கிராமங்கள் குறித்து, பதிவுத்துறை வட்டாரங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், திருப்போரூருக்கு தெற்கிலுள்ள ஆலத்துார், கருங்குழிப்பள்ளம், பையனுார், சிறுதாவூர், ஆமூர், அதிகமநல்லுார் ஆகிய கிராமங்கள், திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சேர்க்கப்படாமல், சம்பந்தமில்லாத கேளம்பாக்கம் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.அதேபோல், கேளம்பாக்கத்தை ஒட்டியுள்ள படூர், புதுப்பாக்கம், சாத்தங்குப்பம் கிராமங்கள், நாவலுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.வெளிச்சை, கொளத்துார் கிராமங்கள், அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சேர்க்காமல், திருப்போரூர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.இதேபோல, சிறுதாவூரை சம்பந்தமில்லாமல் கேளம்பாக்கத்தில் இணைப்பதை அறிந்த சிறுதாவூர் ஊராட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்., 24ம் தேதி, அமைச்சர் அன்பரசன் உட்பட துறை சார்ந்தோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதேபோல், அ.தி.மு.க., - பா.ம.க., புரட்சி பாரதம், வி.சி.க., என அனைத்துக் கட்சிகளின் சார்பில், மார்ச் 17ம் தேதி, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், அன்றே திருப்போரூர் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சார் - பதிவாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த கோரிக்கை மனுவில், புதிதாக உருவாக்கும் ஒவ்வொரு சார் - பதிவகத்திலும் எந்தெந்த கிராமங்களை சேர்க்க வேண்டும் என, பொதுமக்களிடம் கருத்து கேட்டு செயல்படுத்த வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் உள்ளது போல், திருப்போரூரில் ஒருங்கிணைந்த சார் - பதிவாளர் அலுவலக வளாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இவ்வாறு புதிய அலுவலகம் கட்டுவதிலும், வேறு இடத்திற்கு மாற்றுவதிலும், புதிதாக பிரித்து அதனுடன் இணைத்த கிராமங்களால் குளறுபடி ஏற்பட்டது.மேலும், புதிய சார்-பதிவாளர் அலுவலகங்களை சமுதாயக் கூடங்களில் நடத்த ஆட்சேபனை இருப்பதாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இழுப்பறி ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன?

இவ்வாறு புதிய அலுவலகம் கட்டுவதிலும், வேறு இடத்திற்கு மாற்றுவதிலும், புதிதாக பிரித்து அதனுடன் இணைத்த கிராமங்களால் குளறுபடி ஏற்பட்டது.மேலும், புதிய சார்-பதிவாளர் அலுவலகங்களை சமுதாயக் கூடங்களில் நடத்த ஆட்சேபனை இருப்பதாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இழுப்பறி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ