தண்டையார்பேட்டை: நவ. 20-: 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில், 24 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சித்ரலேகா, 70. இவர், தண்டையார்பேட்டையில் உள்ள வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த செப்., 25ம் தேதி, என் மொபைல் போனில் பேசிய மர்ம நபர், சதக்கான் என்பவரின் ஆள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால், என் ஆதார் எண், மொபைல்போன் எண்ணை முடக்க போவதாக கூறினார். வாட்ஸாப் வீடியோ காலில் பேசிய அவர், தன்னை காந்தி நகர் போலீஸ் மதன்குமார் என அறிமுகம் செய்து, என் ஆதார் கார்டு, உச்ச நீதிமன்ற ஆணை ஆகியவற்றை காட்டி, 'டிஜிட்டல் கைது' செய்வதாக கூறினார். விசாரணை முடிவடையும் வரை, குடும்ப உறுப்பினருடன் தொடர்பு கொள்ள கூடாது எனவும் மிரட்டினார். மீண்டும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், சி.பி.ஐ., ஆபீசர் என அறிமுகம் செய்து, என் வங்கி கணக்கிலுள்ள இருப்பு தொகையை கேட்டார். பின், வங்கியில் உள்ள தொகையை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பும்படியும், விசாரணை முடிந்து பணத்தை திரும்ப அனுப்புவதாகவும் கூறினார். இதை நம்பிய நான், கடந்த செப்., 22ம் தேதி, வங்கிக்கு நேரில் சென்று, என் வங்கி கணக்கு மற்றும் கணவரின் வங்கி கணக்கில் இருந்த மொத்த தொகையான 24 லட்சம் ரூபாயை, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். அதன் பின் தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். நான் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். அதன்படி வழக்கு பதிந்த போலீசார், சித்ரலேகா பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் போன் எண்களின் விபரங்களை ஆய்வு செய்தனர். மொபைல் போன் எண்ணை வைத்து, இதில் தொடர்புடையவர்கள் கர்நாடகா மாநிலம், மைசூரில் இருப்பது தெரிந்தது. வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், தீவிர தேடுதலில் ஈடுபட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட கர்நாடகா, மைசூரை சேர்ந்த தேஜாஸ், 20, பிரணவ், 20, முகமது சமீர், 21, ஆகியோரை கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம், மூன்று மொபைல் போன்கள் மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.