உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாரம்பரிய நெல் நாற்று விடும் நிகழ்ச்சி

பாரம்பரிய நெல் நாற்று விடும் நிகழ்ச்சி

மதுராந்தகம்:ஆடிப்பெருக்கையொட்டி பாரம்பரிய அறிவியல் மையத்தின் சார்பில், 60 வகை பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய முறையுடன் நெல் நாற்று விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சுக்கன் கொள்ளை கிராமத்தில், 11 ஏக்கர் பரப்பில், இயற்கை விவசாய தொழில்நுட்ப மையம் மற்றும் ஆராய்ச்சி பண்ணை உள்ளது. கடந்த 30 ஆண்டு காலமாக இந்த ஆராய்ச்சி பண்ணையில், 172 பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு நெல் நடவு செய்ய நாற்று விடுவது வழக்கம். இம்மையத்தில், தமிழ் பாரம்பரிய முறைப்படி நேற்று ஏர் உழப்பட்டது. பின், உழவு விளைநிலத்திற்கும் மற்றும் விவசாய கிணற்றுக்கும் பூஜைகள் செய்யப்பட்டு, 172 பாரம்பரிய நெல் வகைகளில், முதற்கட்டமாக கிச்சிலி சம்பா, காட்டுயானம், கொத்தமல்லி சம்பா, மொழி கருப்பு சம்பா, செம்பிலிபண்ணி, கருங்குளவி, துாயமல்லி, சிறு மிளகி, மணி சம்பா, கருப்பு சீரக சம்பா உள்ளிட்ட 60 வகை பாரம்பரிய நெல் நாற்று விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், மையத்தின் பொறுப்பாளர்கள், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். அறிவியல் மையத்தின் பொறுப்பாளர் விஜயலட்சுமி, 55, கூறியதாவது: பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதோடு, அவற்றின் பயனையும் மக்களுக்கு எடுத்துரைத்து, விவசாயிகள் இந்த நெல் வகைகளை அதிக அளவில் பயிரிட வேண்டும். விவசாயிகளுக்கு சாகுபடி செலவை குறைத்தல், மகசூல் அதிகரிக்கச் செய்தல், சேமிப்பின் போது ஏற்படும் பாதிப்பை குறைத்தல் மற்றும் வருமானத்தை அதிகரிக்கச் செய்தல் போன்ற குறிக்கோளுடன் இம்மையம் விவசாயிகளுடன் நேரடியாக களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !