பவுஞ்சூரில் ரூ.6.4 லட்சத்தில் மரக்கன்று நாற்று பண்ணை
பவுஞ்சூர்:பவுஞ்சூரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 6.4 லட்சம் ரூபாயில் மரக்கன்று நாற்று பண்ணை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் தயார் செய்யப்படுகின்றன. மதுராந்தகம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், சமூக காடு வளர்ப்பிற்காக, 5,000 மரக்கன்றுகள் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 6.4 லட்சம் ரூபாயில் மரக்கன்று நாற்று பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, வனத்துறை சார்பாக பூவரசு, மலை நெல்லி, பாதாம், எலுமிச்சை, கொய்யா, புங்கன், வில்வம், புளியமரக்கன்று உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் செய்யப்படுகின்றன. இங்கு தயார் செய்யப்படும் மரக்கன்றுகள், சமூக காடுகள் மற்றும் தரிசு நிலங்களில் நட்டு பராமரிக்கப்பட உள்ளன.