நெல் கொள்முதலில் சுணக்கம் உதவியாளர்கள் இருவர் டிஸ்மிஸ்
செங்கல்பட்டு:கொடூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், பணியில் சுணக்கம் காட்டிய உதவியாளர்கள் வினோத் குமார், பிரதீப் குமார் ஆகியோர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்; கண்காணிப்பாளர் சுப்ரமணியன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.செய்யூர் அடுத்த கொடூர் கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விவசாயிகளிடம் இருந்து, நடப்பு பருவத்தில், 29,056 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில், 25,164 நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இந்நிலையில், கொள்முதல் நிலையத்தில் இருந்த 2,000 நெல் மூட்டைகள் சேதமடைந்தது குறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது.இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்மாள் தலைமையில், குழுவினர் ஆய்வு செய்தனர்.நெல் மூட்டைகள் அனைத்தையும், தனியார் அரைவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்நிலையத்தின் பருவகால உதவியாளர்கள் வினோத்குமார், பிரதீப்குமார் ஆகியோரை பணியிலிருந்து,'டிஸ்மிஸ்' செய்தும், அலுவலரும், கண்காணிப்பாளருமான சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்தும், ரேணுகாம்மாள் உத்தரவிட்டுள்ளார்.