லாரி மோதி இருவர் உயிரிழப்பு
பாடி, நவ. 17-கொரட்டூர் அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் பாபு, 70; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர், 43; தனியார் நிறுவன ஊழியர். நேற்று மதியம் 1:00 மணியளவில் இருவரும் தனித்தனியே அவரவர் இரு சக்கர வாகனத்தில் பாடி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பைக்கின் பின்னால் வந்த ஆவின் பால் வினியோகம் செய்யும் மினி லாரி, இருவர் மீதும் பலமாக மோதியது. நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர். இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியது. இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானர். விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து மாயமானார்.தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போக்குவரத்து போலீசார், இருவர் உடலையும் மீட்டு, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.