உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அனுமந்தபுரத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் 2 சவரன் பறிப்பு

அனுமந்தபுரத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் 2 சவரன் பறிப்பு

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரத்தில் வீடு புகுந்து, பெண்ணிடம் 2 சவரன் நகை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 30. இவர், பொத்தேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில், குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 1:30 மணியளவில், கடப்பாரை கம்பியைப் பயன்படுத்தி கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், தமிழ்ச்செல்வனின் தாய் கலைச்செல்வி,60 கழுத்தில் அணிந்திருந்த, 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தமிழ்ச்செல்வன், காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்து, மறைமலை நகர் போலீசார் விசாரித்தனர். இதில், சம்பவம் நடந்த பகுதி திருப்போரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது எனத் தெரிந்தது. இதையடுத்து, திருப்போரூர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ