தாம்பரம் ரயில் நிலையத்தில் டூ - வீலர் திருடியோர் கைது
தாம்பரம்:கிழக்கு தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி, காயலான் கடையில் விற்பனை செய்த இருவரையும், அவற்றை வாங்கிய மூன்று பேரையும், போலீசார் கைது செய்தனர்.கிழக்கு தாம்பரம், ரயில் நிலைய நுழைவாயிலில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக புகார் வந்தது. இது தொடர்பாக, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு பேர், இருசக்கர வாகனங்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.அதன் அடிப்படையில், பெருங்களத்துாரை சேர்ந்த சாம்பிரஸ், 27, சுகவருமன், 22, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், 30 இருசக்கர வாகனங்களை திருடி, பெருங்களத்துார், குண்டுமேடு பகுதியில் காயலான் கடை வைத்திருக்கும், பெருங்களத்துாரை சேர்ந்த விஜயகுமார், 56, லிங்கதுரை, 40, கண்ணன், 32, ஆகியோரிடம் மலிவு விலைக்கு விற்றது தெரியவந்தது.வாகனங்களை மலிவு விலைக்கு வாங்கிகொள்ளும் அவர்கள், அவற்றை முழுதுமாக கழற்றி, பாகங்களை தனித்தனியாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஐந்து பேரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.