கார் மோதி 5 பெண்கள் பலி பல்கலைக்கழக மாணவர் கைது
மாமல்லபுரம்,:மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு, பழைய மாமல்லபுரம் சாலையில், கடந்த 27ம் தேதி, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, ஐந்து பெண்கள் சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது, மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற ஸ்கோடா ரேபிட் கார், அவர்கள் மீது மோதி, ஐந்து பெண்களும் உடல் சிதறி பலியாகினர்.இது தொடர்பாக, மாமல்லபுரம் போலீசார், குன்னப்பட்டு தனியார் பல்கலைக்கழக மாணவரான, சித்தாலபாக்கத்தைச் சேர்ந்த ஜெயந்த் இமானுவேல் மகன் ஜோஸ்வா ஜெயந்த், 19, என்பவர் மீது, அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிந்து, கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.காரில் பயணம் செய்து காயமடைந்த, அதே பல்கலைக்கழக மாணவர், சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் மகன் வைபவ், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மற்ற இருவர், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. காரில் பயணம் செய்த நான்கு பேரையும் சோதித்ததில், அவர்கள் மது அருந்தவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.