தடுப்பு இல்லாத விவசாய கிணறு பாலுாரில் விபத்து அபாயம்
பவுஞ்சூர்:பாலுார் கிராமத்தில், சாலையோரத்தில் அபாய நிலையிலுள்ள விவசாய கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவுஞ்சூர் அடுத்த பச்சம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலுார் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, பாலுார் கிராமத்திற்குச் செல்லும் சாலை ஓரத்தில், தனியாருக்குச் சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது.இந்த கிணறு அருகே தடுப்புச் சுவர் இல்லாமல், ஆபத்தான நிலையில் உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் கால்நடைகள், தடுமாறி கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. இரவில் இவ்வழியாக செல்லும் வாகனங்கள், கிணற்றில் விழ வாய்ப்புள்ளது. எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரம் ஆபத்தான நிலையிலுள்ள இந்த கிணற்றுக்கு தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.