நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதியின்றி அவதி
மறைமலைநகர்:தைலாவரம், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், குடியிருப்பில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். மறைமலைநகர் நகராட்சி, முதலாவது வார்டு தைலாவரம் பகுதியில், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 960 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசித்து வந்த, 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலி செய்யப்பட்டு, அவர்களுக்கு இங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு, வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், குடியிருப்பில் வசிப்போர் கடும் அவதிஅடைந்து வருகின்றனர். குடியிருப்பில் வசிப்போர் கூறியதாவது: இந்த பகுதி, ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து 3 கி.மீ.,யில் உள்ளதால், பேருந்து வசதியின்றி தினமும், பல்வேறு தேவைகளுக்காக நடந்து செல்லும் நிலை உள்ளது. ஆட்டோக்களில் செல்லும் போது, அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், இந்த குடியிருப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், வெளியில் உள்ள கடைகளில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலை தொடர்கிறது. எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுவாஞ்சேரி -- தைலாவரம் வரை சிற்றுந்துகள் இயக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.