சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மறைமலைநகர் சிப்காட் பகுதியில் நெரிசல்
மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில், 270க்கும் மேற்பட்ட, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களின் இருசக்கர வாகங்களை தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தாமல், தொழிற்சாலை முன்பக்கம், சாலையை ஒட்டியுள்ள காலி இடத்தில் நிறுத்துகின்றனர்.இப்படி சாலையோரம் நிறுத்தப்படுவதால், தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், தொழிலாளர்களை ஏற்றி வரும் தனியார் பேருந்துகள் திரும்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மறைமலை நகர் சிப்காட் பகுதி அமைக்கும் போதே, கனரக வாகங்கள் வந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு, பெரிய அளவிலான சாலைகள் அமைக்கப்பட்டன.தற்போது அந்த இடங்கள், அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலை நிர்வாகங்கள், ஹெல்மெட் அணியாமல் வரும் பணியாளர்களின் வாகனங்களை, தொழிற்சாலை வளாகத்திற்குள் அனுமதிப்பது இல்லை.இதனால் தொழிலாளர்கள், சாலையோரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களால், இந்த பகுதியைக் கடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.காமராஜர் சாலையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றி வரும் வேன், பேருந்து போன்றவை, சாலையின் நடுவே நிறுத்தி பணியாளர்களை இறக்கி விடுகின்றன.அதே நேரத்தில், மற்ற தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.