விளாங்காடு ஊராட்சியில் சாலை வசதியின்றி அவதி
சித்தாமூர்:விளாங்காடு ஊராட்சியில், புதிதாக சாலை அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த விளாங்காடு ஊராட்சியில், 850க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்காடு காலனியில் உள்ள நேரு தெரு மற்றும் அம்பேத்கர் தெருக்களில், 15 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். முறையான பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் ஜல்லிகள் பெயர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக சாலை பழுதடைந்து உள்ளது. இதனால், மழைக்காலத்தில் தெருக்கள் சகதியாக மாறுவதால், நடந்து செல்ல முடியாமல், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும், சகதியில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே, விளாங்காடு ஊராட்சியில் புதிதாக சாலை அமைக்க, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.