உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் ரூ.2 கோடி மதிப்பு நீர்வழிப்பாதை கபளீகரம்: மீட்கும் உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் தயக்கம்

கூடுவாஞ்சேரியில் ரூ.2 கோடி மதிப்பு நீர்வழிப்பாதை கபளீகரம்: மீட்கும் உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் தயக்கம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4,000 சதுர அடி பரப்பளவு நீர்வழி பாதை, தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் தயங்குவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சி, 8.5 சதுர கி.மீ., பரப்பில் உள்ளது. இங்குள்ள, 30 வார்டுகளில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதில், 30வது வார்டுக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், பெரியார் நகர் பகுதியில், தனியார் ஆயத்த ஆடை நிறுவனம் உள்ளது. அதன் எதிரே, நீர்வழி பாதைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 4,000 சதுர அடி நிலம், தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால், சாலையோரம் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் மாயமாகி விட்டது.தவிர, பெருமழை காலங்களில், சாலையில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நீர்வழி பாதைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை, தனி நபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலை, இப்பகுதியின் பிரதான வழித்தடமாகும். தினமும், 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வழியாக பயணிக்கின்றன. 2021 அக்டோபரில் பெய்த பெரு மழையின் போது, இந்த வழித்தடத்தில், 'இன்டிமேட் பேஷன்' என்ற தனியார் நிறுவனம் எதிரே, சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதையடுத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மழைநீர் தேக்கத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அப்போது, இன்டிமேட் பேஷன் நிறுவனத்தின் எதிரே, சாலையோரம் இருந்த நீர்வழி பாதை, தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த இடத்தில் கதவு எண். 244 என்ற முகவரியில், தலா ஆறு கடைகள் வீதம், இரு தளங்களில் வணிக ரீதியான கட்டடங்கள் கட் டப்படுவது தெரிந்தது. பின், வருவாய் துறை மூலமாக அந்த நீர்வழி பாதையின் தரவுகள் சேகரிக்கப்பட்ட போது, சர்வே எண் 495/1ல், 4,000 சதுர அடி பரப்புள்ள நீர்வழி பாதைக்கான நிலம், ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, 2021 நவ., 25ம் தேதி, ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் மற்றும் பேரிடர் துறை கண்காணிப்பாளர் மற்றும் வண்டலுார் வட்டாட்சியர் ஆறுமுகம் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். பின், ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற, வண்டலுார் வட்டாட்சியருக்கு, 2021 நவ., 2ம் தேதி, பேரிடர் துறை வாயிலாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், இதுநாள் வரை அந்த ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றப்படவில்லை.அத்துடன், நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு, முறைகேடாக வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பும், இதுவரை துண்டிக்கப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள நீர்வழி பாதையை மீட்க, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல் பின்புலம்

கூடுவாஞ்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்வழிப் பாதையின் தற்போதைய சந்தை மதிப்பு, 2 கோடி ரூபாய். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள முருகன் என்பவர் அரசியல் பின்புலம் உள்ளவர் என்பதால், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முடியாத சூழல் நிலவுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நீர்வழி பாதையை மீட்கக்கோரி, 2021 நவ., 28ம் தேதி, வண்டலுார் வட்டாட்சியருக்கு, பேரிடர் மேலாண்மைத் துறை கண்காணிப்பாளர் அனுப்பிய உத்தரவு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் வட்டம், நெ.17, நந்திவரம் கிராமம், நெல்லிக்குப்பம் ரோடு, இன்டிமேட் கம்பெனி எதிரே உள்ள மழை நீர் செல்லும் கால்வாய் பகுதி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், நெல்லிக்குப்பம் சாலையிலும், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. மழை நீர் செல்லும் கால்வாய் பகுதி, சர்வே எண் 495/1ல், 9.94 ஹெக்டேர் பரப்பில், 4,000 சதுர அடி மேய்க்கால் வகைப்பாடு நிலத்தில், முருகன் என்பவரால் வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன. மேற்படி ஆக்கிரமிப்பு நிலத்தை மூன்று நாட்களுக்குள் மீட்டு, அரசின் வசம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில், அரசு விதிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை விதி 2005ன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முறைகேடாக மின் இணைப்பு

கூடுவாஞ்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலம் நீர்வழிப்பாதை என்பதால், அதில் கட்டப்பட்டுள்ள வீடு மற்றும் கடைகளுக்கு மின்சார வாரியம், மின் இணைப்பு வழங்க மறுத்து விட்டது. ஆனால், ஆக்கிரமித்து வைத்துள்ள முருகன் என்பவர், தன் அரசியல் பின்புலத்தால், அதே பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மனைப் பிரிவின் சான்றுகளை கொடுத்து, முறைகேடாக மின் இணைப்பை பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !