உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பார்க்கிங் இல்லாத திருமண மண்டபங்கள் திருப்போரூரில் வாகன ஓட்டிகள் அவதி

பார்க்கிங் இல்லாத திருமண மண்டபங்கள் திருப்போரூரில் வாகன ஓட்டிகள் அவதி

திருப்போரூர்:திருப்போரூரில், 'பார்க்கிங்' வசதியில்லாத திருமண மண்டபங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. திருப்போரூர் கிழக்கு மாட வீதி, மேற்கு மாட வீதி, வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, வணிகர் தெரு, ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இவற்றில், சில திருமண மண்டபங்களைத் தவிர, பெரும்பாலான மண்டபங்களில் வாகனங்கள் நிறுத்தும் வசதி இல்லை. இந்த மண்டபங்களுக்கு வருவோர் தங்களின் வாகனங்களை, மேற்கண்ட நான்கு மாட வீதிகள், மண்டபத்தின் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால், முகூர்த்த நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: வாகன நிறுத்த வசதியில்லாத திருமண மண்டப நிர்வாகத்தினர், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், தங்களின் மண்டபத்திற்கு வருவோரின் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று இடங்களிலாவது, வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும். இதுமட்டுமின்றி, திருமண மண்டபத்தின் வெளியே பாதுகாவலரை நியமித்து, வாகனங்களை முறையாக நிறுத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ