உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செயல்படாத நிலைக்குழு எதற்கு? தி.மு.க.,வினரே போர்க்கொடி தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அ.தி.மு.க.,வும் வெளிநடப்பு

செயல்படாத நிலைக்குழு எதற்கு? தி.மு.க.,வினரே போர்க்கொடி தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அ.தி.மு.க.,வும் வெளிநடப்பு

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், செயல்படாத நிலைக்குழுக்கள் எதற்கு என, தி.மு.க., கவுன்சிலர்களே கேள்வி எழுப்பினர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில், நேற்று நடந்தது. இதில், கமிஷனர் பாலச்சந்தர், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலை பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநகராட்சியில், சுகாதாரம், கல்வி, கணக்கு, பணி உள்ளிட்ட 6 குழுக்கள் உள்ளன. இக்குழுக்களை செயல்படவே விடுவதில்லை, அதற்கான அங்கீகாரம் தரப்படவில்லை. கூட்டம் நடத்தவே இல்லை. இதற்கு குழுக்களை கலைத்து விடலாம் என, தி.மு.க., கவுன்சிலர்களே புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, 184 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நடந்த விவாதம்:ஜெகநாதன், 5வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: தாம்பரத்தில் சாலையை கடப்பதற்காக காத்திருந்த உணவு டெலிவரி ஊழியர் மீது, மின்கம்பம் விழுந்து படுகாயமடைந்த சம்பவத்தில், மின்கம்பத்தை முறையாக பராமரிக்காத பொறியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மின்கம்பத்தை பராமரிக்கும் பொறுப்பு ஒப்பந்ததாரருடையது. அதனால், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, மின் கம்பங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி செயல்பாடுகள் குறித்த சர்வே தொடர்பான படிவம், ஆங்கிலத்தில் உள்ளது. அதனால், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிவத்தை வழங்க வேண்டும்.நடராஜன், 67வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: குமாரசாமி பூங்காவை மேம்படுத்தும் பணி மற்றும் பத்மாவதி நகர் பிரதான சாலையில், நீண்ட நாள் கோரிக்கையான சிறுபாலம் மற்றும் கால்வாய் கட்டும் திட்டத்திற்கு, நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்.விஜயலட்சுமி, 28வது வார்டு மார்க்சிஸ்ட் கவுன்சிலர்: அனகாபுத்துார் ஆற்றங்கரை ஓரம் அகற்றப்பட்டு, கீரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளோரின் பிள்ளைகள், அனகாபுத்துாரில் படிக்கின்றனர். அவர்களின் வசதிக்காக பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். ஆதார், ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம் செய்ய, மாநகராட்சி சார்பில் முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.கற்பகம், 41வது தி.மு.க., கவுன்சிலர்: கவுன்சிலர்களுக்கு 'டெண்டர்' நோட்டீஸ் வருவதே இல்லை. இப்படி இருந்தால், எங்கள் வார்டில் என்ன வேலை இருக்கிறது என்பது எப்படி தெரியும்.ஜோசப் அண்ணாதுரை, தி.மு.க., 2வது மண்டல தலைவர்: பல்லாவரத்தில் பழைய வரியை கணக்கிடாமல், புதிய வரி விதிப்பு போடுகின்றனர். இதனால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது சம்பந்தமாக, கமிஷனர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.காமராஜ், தி.மு.க., 4வது மண்டல தலைவர்: பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகளில், வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.நரேஷ்கண்ணா, 2வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: அனகாபுத்துார் வார்டு அலுவலகம் செயல்பாடின்றி உள்ளது. அதை புனரமைத்து, போதிய ஊழியர்களையும், நான்கு வார்டுகளுக்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும்.பாலச்சந்தர், கமிஷனர்: மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் அமைக்க, ஒரு திட்டம் தீட்டப்படும். பாதாள சாக்கடை திட்டம் இல்லாத இடங்களில் கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பொறியியல் பிரிவில் போதுமான ஆட்கள் இல்லாததால், ஒவ்வொரு பணியும் படிப்படியாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு, கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.எதிர்க்கட்சி தலைவர் சங்கர் பேசும்போது, அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில், நான்கு ஆண்டுகளாக எந்த பணியும் நடக்கவில்லை எனக்கூறி, சில நாட்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி பேச முயன்றார்.'தினமலர்' செய்தியை காண்பித்ததும், தி.மு.க., கவுன்சிலர்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர். பின், எந்த பணியும் நடக்கவில்லை எனக்கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை