உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரம் பெயர் முன்னிலைப்படுத்தப்படுமா? கூடுவாஞ்சேரி பகுதியினர் குமுறல்

நந்திவரம் பெயர் முன்னிலைப்படுத்தப்படுமா? கூடுவாஞ்சேரி பகுதியினர் குமுறல்

நந்திவரம்:ஆன்மிக ஸ்தலமான நந்திவரம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்து, கூடுவாஞ்சேரி என்ற பெயரை முன்னிலைப்படுத்துவதாக அப்பகுதி வாசிகள் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பேரூராட்சியாக இருந்த இப்பகுதி, கடந்த 2021ல், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.நந்திவரம் என்ற பெயரை மறைத்து, கூடுவாஞ்சேரி என்ற பெயரே முன்னிலைப்படுத்தப்படுவதாக நந்திவரம் பகுதிவாசிகள் புகார் எழுப்பி உள்ளனர்.இதுகுறித்து நந்திவரம் பகுதிவாசிகள் கூறியதாவது:நந்திவரத்தில் உள்ள, 1,500 ஆண்டு பழமையான, தேவார பாடல் பெற்ற, நந்தீஸ்வரர் கோவிலை மையப்படுத்தியே இதற்கு நந்தீஸ்வரம் என்று பெயர் சூட்டப்பட்டது. பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில், முக்கிய வணிக ஸ்தலமாக இவ்விடம் விளங்கியது.நந்திவரத்தின் ஒரு பகுதியாகவே கூடுவாஞ்சேரி இருந்தது. மெல்ல மெல்ல மக்கள் தொகை அதிகரித்ததால், நந்திவரம் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிகள் தனித்தனி ஊராட்சியாக பிரிக்கப்பட்டன.இதில், நந்திவரம் ஊராட்சியே பரப்பில் பெரியது என்பதாலும், ஆன்மிக ஸ்தலம் என்பதாலும், கடந்த, 1976க்கு முன், நந்திவரம் என்பதே அனைவராலும் அறியப்பட்டிருந்தது. பின் இவ்விரு ஊராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.இந்நிலையில், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியின் முக்கியப்புள்ளிகளாக மாறினர். இதையடுத்து, நந்திவரம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யத் துவங்கினர்.தொடர்ந்து, அரசு பேருந்துகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் கூடுவாஞ்சேரி என்ற பெயர் மட்டும் இடம் பெறத் துவங்கி, தற்போது, அதுவே பிரதானமாகிவிட்டது.இப்போதும் நந்திவரம், கூடுவாஞ்சேரி பகுதிக்கு தனித்தனியாகவே கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளனர்.புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமான நந்திவரம் என்ற பெயரை மீட்டெடுக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்கட்டமாக, அரசு பேருந்துகளில் நந்திவரம் என்ற பெயரை இடம் பெற செய்ய வேண்டும். தவிர, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் நந்திவரம் என்பதை கட்டாயமாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள காலனி என்ற பெயர்களை நீக்கி மாற்று பெயர் வைக்கப்படும் என சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி கூடுவாஞ்சேரி என்ற பெயரை நீக்கி நந்திவரம் என்ற பெயரை முன்னிலைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை