திருப்போரூர் - நெம்மேலி அரசு பஸ் இயக்கப்படுமா?
திருப்போரூர்:திருப்போரூரில் இருந்து, நெம்மேலி வழியாக, பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் திருப்போரூர் - - நெம்மேலி சாலை உள்ளது. இச்சாலையின் இடையே, 6 கோடி ரூபாய் மதிப்பில் பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் இ.சி.ஆர்., சாலை சார்ந்த பல்வேறு கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் நெம்மேலியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இருப்பதால் மாணவர்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. வளர்ச்சியடைந்து முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்தும் இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து வசதி இல்லை. கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியரும், கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, திருப்போரூரில் இருந்து, நெம்மேலி வழியாக, பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.