ஜி.எஸ்.டி., சாலையில் கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுமா?
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன.சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வங்கி, மருத்துவமனை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.இங்கு ஜி.எஸ்.டி., சாலையில் அரசியல் பொது கூட்டங்கள் நடைபெறுவதால் பொது மக்கள் நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் தி.மு.க., சார்பில் சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவோர் தங்களின் டூ -- வீலர்கள், கார்களை சாலையில் நிறுத்துவதால் பாதசாரிகள். பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஜி.எஸ்.டி.,சாலையில் செங்கல்பட்டு மார்க்கத்தில் சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் கட்சி பொது கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் போன்றவை மேடை அமைத்து நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு வருகிறது.மேலும் கூட்டம் நடைபெறும் போது பேருந்துகள் நிறுத்தத்திற்கு முன் அல்லது துாரத்தில் நிறுத்தப்படுகின்றன. எனவே இந்த பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்த போலீசார் தடை விதித்து மாற்று இடத்தில் கட்சி பொது கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.