ஜி.எஸ்.டி., சாலையில் 3 மாதத்தில் 25 பேர் பலி... தொடர் விபத்துகள் : பறக்கும் வாகனங்களுக்கு கடிவாளம் அவசியம்
கூடுவாஞ்சேரி:பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரிக்கும் நிலையில், கட்டுப்பாடற்ற வேகத்தில் பறக்க நினைக்கும் வாகன ஓட்டிகளால், அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, விபத்துகளை குறைக்க, வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னையின் முக்கிய வழித்தடமாக உள்ள ஜி.எஸ்.டி., சாலை எனப்படும் மாபெரும் தெற்கு வழித்தட சாலை, தேசிய நெடுஞ்சாலை 45ல் ஒரு பகுதியாக உள்ளது.சென்னை, கத்திப்பாரா சந்திப்பில் துவங்கும் இந்த ஜி.எஸ்.டி., சாலை செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், தேனி வரை 496 கி.மீ., துாரம் உள்ளது.இதில், பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான 29 கி.மீ., நீளமுள்ள சாலையில் தான், அதிக விபத்துகள் நடக்கின்றன. உயிர் பலியும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விபத்து அச்சம் குறித்த எவ்வித கவலையும் இல்லமல், அதிக வேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளே இதுபோன்ற விபத்துகளுக்கு முதல் காரணமாக உள்ளனர்.எனவே, பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும், வேக கட்டுப்பாடு அவசியம் தேவை என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:புதிதாக வீடு கட்டி குடியேறியவர்கள், தனியார் கல்லுாரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் என, கடந்த 25 ஆண்டுகளில் பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான பகுதிகள், மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளன.இவ்விடங்களில் வசிப்போர் தொழில், வணிகம், கல்வி சார்ந்து சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிக்குள் பயணிக்க, ஜி.எஸ்.டி., சாலை மட்டுமே வழித்தடமாக உள்ளது. தவிர, தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் வாகன ஓட்டிகளும், ஜி.எஸ்.டி., சாலையில் தான் பயணித்தாக வேண்டும்.தவிர, பல்லாவரம் -- துரைப்பாக்கம் இடையேயான ரேடியல் சாலை, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை ஆகியவையும் ஜி.எஸ்.டி., சாலையில் இணைவதால், வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது, ஜி.எஸ்.டி., சாலையில் நுழைதல், வெளியேறுதல் என்ற வகையில், நாளொன்றுக்கு 3 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன. விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 5 லட்சம் வரை அதிகரிக்கிறது.இருவழிப் பாதையாக இருந்த ஜி.எஸ்.டி., சாலை, கடந்த 2004ம் ஆண்டு நான்குவழிப் பாதையாக மாற்றப்பட்டது.தற்போது, பெருங்களத்துார் முதல் செட்டிபுண்ணியம் வரை எட்டு வழிச் சாலையாகவும், அங்கிருந்து பரனுார் வரை ஆறு வழிச் சாலையாகவும், பின் செங்கல்பட்டு வரை நான்கு வழிச் சாலையாகவும் உள்ளது.சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகளின் மனநிலை மாறவில்லை. போக்குவரத்து நெரிசல் குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் முந்திச் செல்வது, விரைவாக செல்வது என்பதிலேயே குறியாக உள்ளனர்.தவிர, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து கிளம்பும் ஆம்னி பேருந்துகள், இந்த வழித்தடத்தில், 60 முதல் 90 கி.மீ., வேகத்தில் பயணிக்கின்றன. இதுபோல், இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்வோர், 100 கி.மீ., வேகத்தில் பறப்பதும், வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.மின்னல் வேகத்தில் பறக்கும் இதுபோன்ற வாகன ஓட்டிகளால், பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன.கடந்த ஜனவரி முதல் மார்ச் 31 வரை, 90 நாட்களில், 200க்கும் அதிகமான சாலை விபத்துகள் இந்த வழித்தடத்தில் நடந்துள்ளன. இதில், உயிர் பலியானோர் எண்ணிக்கை 25க்கும் மேல் உள்ளது.இந்த விபத்துகள் குறித்து ஆராய்ந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கட்டுப்பாடற்ற வேகமே விபத்திற்கு முதல் காரணம் என தெரிவித்து உள்ளனர்.எனவே, விபத்துகளை தவிர்க்கவும், குறைக்கவும், பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், அனைத்து வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு நடைமுறையை உருவாக்கி, அதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.