பெண்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம் மகளிர் ஆணைய தலைவி உத்தரவு
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், குழந்தைகள் மற்றும் மகளிருக்கு எதிரான குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்முறை குறித்த மனுக்களை, நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி ஆய்வு செய்தார்.இதில், கலெக்டர் அருண்ராஜ், எஸ்.பி., சாய்பிரணீத், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.அதன்பின், மகளிர் ஆணைய தலைவி குமாரி பேசியதாவது:செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், புகார் அளிக்க வரும் பெண்களை அலைக்கழித்து, மனுக்களை வாங்காமல் திருப்பி அனுப்புவதாக புகார் வந்தது. பெண்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது, உடனே சி.எஸ்.ஆர்., பதிவு செய்ய வேண்டும்.சென்னை பெரும்பாக்கம் பகுதியில், குழந்தை திருமணம் அதிகமாக நடக்கிறது. குழந்தை திருமணங்களை தடுக்க, அப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தனியார் துணி கடைகளில், 18 வயதுக்குட்பட்ட பெண்கள், ஓய்வு இல்லாமல் 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். அங்கு, பெண்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும், தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் குறித்தும், தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்து, அறிக்கை தரவேண்டும்.அரசு மருத்துவமனையை தவிர, தனியார் மருத்துவமனைகளில், குழந்தை திருமணம் வாயிலாக கருவுற்ற சிறுமியருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.அப்படிப்பட்ட தனியார் மருத்துவமனைகளில், மருத்துவத் துறையினர் ஆய்வு செய்து, குழந்தை திருமணம் கண்டறியப்பட்டால், தடுத்து நிறுத்த வேண்டும்.மாணவியருக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு, பிளஸ் 2 முடித்த மாணவியருக்கு மேற்படிப்பு வசதிகளை, கல்வித்துறையினர் செய்து தருவதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.