வடபழனி, சென்னை, அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை உள்ள 100 அடி சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது.இச்சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால் உள்ளது.இதில் பல இடங்களில், மழைநீர் வடிகால் முறையாக இணைக்கப்படாமல் இருந்தது.இதையடுத்து, 100 அடி சாலையில் விடுபட்ட மழைநீர் வடிகால் பகுதிகளை இணைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.அதன்படி, 1.7 கி.மீ., துாரத்திற்கு, 11 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இதில், வடபழனி 100 அடி சாலை அழகிரி தெரு அருகே, மழைநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.இப்பணியின் போது, 100 அடி சாலை வழியாக செல்லும் பாதாள சாக்கடை குழாய் சேதம்அடைந்தது.அவ்வழியாக, உயர் மின்னழுத்த மின்வடம் செல்வதால், சேதமடைந்த பாதாள சாக்கடை குழாயை சீரமைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.தற்போது, குழாய் சேதமடைந்த பகுதியில், குளம் போல் கழிவுநீர் தேங்கியுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் வியாபாரிகள், கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.உடைந்த பாதாள சாக்கடை குழாயை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.